May 16, 2017

உறவுகள் !!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன்.

சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் – சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான் ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
– நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ – இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ’ என்று யநெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே’ என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

May 15, 2017

நீ

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

 

நீ என்பது நீயேயானாளும்

நான் என்பது நீயும் தானடி!

 

May 15, 2017

முழுமதி

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

உன் அரவணைப்பு போதும், சூரியனும் குளிர்ந்து போக.

உன் பார்வையால் மதியும் ஒளி பெறும்

உன் சிறு அசைவு போதும், காற்று ஆசுவாசப்பட.

உன் இதழ்களால் பூக்களுக்கு வாசம் வரும்

May 4, 2017

நிலவு

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

உன் கனவில் என் பிம்பங்களை கண்டதை

நீ சொல்லி கேட்கையில்

ஏதோ நிலவிற்க்கு சென்று வந்த எண்ணம் தோன்றுதடி!!!