இந்த கவிதைக்கு முதல் பரிசு!
ஆம். கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே போட்டிகள் வைத்தார்கள்.
நான் கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். ( அது ஒண்ணு தானே தெரியும் )
பலபேர் எழுதியதில் இறுதியில் எனக்கு முதல் பரிசு. அந்த கவிதை இதோ:
மனிதா,
நீ ஒரு கல்.
ஆம்
கவனில் வைக்கப்பட்ட கல் நீ
காலம் என்ற கவன்
உன்னை பின் தள்ளுவது
கண்டு கலங்காதே !
தடைகளை தாண்டி கனியினை
அடைந்திடவே
உன்னை பின் தள்ளுகிறது !
காகத்தின் தாகத்தை மேகம் தணிப்பதில்லை
மேகத்தின் உதிர்வுகளான நீரே தணிக்கும்.
நீ
மேகமாய் இருப்பதும்
காகமாய் இருப்பதும்
உன் கையில் தான் !
மனிதா,
காலம்
கடைந்தெடுத்த
அமுது !
அறிந்து கொள்ள ஆயிரம் உண்டு
உன் வாழ்வில் தினந்தினம் !
அறிந்ததை அறிமுகப்படுத்து
உன் வாழ்விற்கே ,
உன்னுடைய அனுபவமாய் !
மனிதா
துன்பம் என்ற கதவின்
சாவி உன்னிடமே உள்ளது
அதை தூக்கி ஏறிய
உன்னால் முடியும்.
நீ நிச்சயம் எறிவாய் !
காலம் உனக்கு கைகொடுக்கும்
காவியம் படைக்க மட்டுமல்ல,
புராணமும் படைக்கலாம்
தினந்தினம் !
பூமாலை கூட
மாலை வரும்முன்
வாடி விடும்
இச்சை மறந்து உண்மை
லட்சியம் கொண்ட
நெஞ்சம்
வாடுவதும் இல்லை
உதிர்வதும் இல்லை
சிந்திக்கும் எண்ணமுடையோன்
சிற்பிக்கும் சிலை வடிப்பான்
கதறிக் கொள்ளும் எண்ணம்மிருப்போன்
புலவனுக்கும் கவியுரைப்பான்
வாழ்க்கை வாழ்த்து
பார்க்கவே
வீழ்ந்து வானத்திலிருந்து
பார்க்க அல்ல
காலனுக்கு காத்திருக்கும் வரை
காலத்தை ஏன் வீண் செய்கிறாய்
மனிதா
காலம் உன்னை வெல்ல
ஆயுதம் கொண்டு வரலாம்
சோம்பலாக !
அதை வெறி கொண்டு எழுந்து
முறித்து ஏறி !
இறைவாழ் இடத்தினிலே
உரையாடல் நடத்துகிறது
வாசற்படியும் கருவறைச் சிலையும் !
வாசற்படி இயம்பியது
நானும் நீயும்
ஒரே மலைக்காரர்களே !
என்னையும் உன்னையும் உரித்தது
ஒரே உளியே !
ஆனாலும் இங்கு மட்டும்
என்னை மிதித்து வந்து
உன்னை மதிக்கிறார்களே
மனிதர்கள் , இந்த வேறுபாடு ஏன் ?
சிலை தன்
மௌனக் கடலை
அலை விடச் செய்தது
மாபெரும் மலையாய் நாம்கூடி
வாழ்ந்தோம்
சிந்தித்த சிற்பி சிறிய உளியால்
உடைத்தான்
நான்
கலையாமல் சிதறாமல் சிலையானேன்
நீயோ
மரணம் போல் மரிந்து சில்துகளானாய் !
எதையும் தாங்கி எதிர்கொள்
உன்னை மதியா உயிர் இல்லை !!!
இதை கவிதைப் போட்டிக்கு தலைப்பு என்ன என்பது நினைவில் இல்லை, எந்த தலைப்பு பொருத்தமாய் இருக்கும் ???
என்றும் நட்புடன்,
பூபால அருண் குமரன் ரா