வழக்கமாக எல்லா கல்லூரிகளிலும் கல்லூரி தினம், பேருந்து தினம், பாரம்பரிய உடைஅணியும் தினம் என பலவாறு கொண்டாடப் படும்.

சற்று வித்தியாசமாக எங்கள் கல்லூரியில் பொங்கல் தினவிழா கொண்டாடப்படும்.

பொங்கல் தினத்திற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு கல்லுரியில் வைத்து ஒவ்வொரு வருட மாணவர்களும் அவரவர் வகுப்புகளில் தனித்தனியே பொங்கல் பொங்குவார்கள். எந்த வகுப்பில் முதலில் பொங்கல் பொங்கும் என் சின்ன போட்டியும் நடைபெறும்.

இந்த வழக்கத்தை கல்லூரியில் அறிமுகப்படுதியவர் : கல்லூரியின் முன்னாள் முதல்வர் திருமதி மகேஸ்வரி அவர்கள்.

தற்போது SCSVMV பல்கலைகழகத்தில் பணி புரிந்து வருகிறார்.

முதலாம் ஆண்டு பொங்கல்தின விழாவின் நடந்த கலாட்டாக்களை இங்கே காணலாம். வரும் பதிவுகளை மற்ற வருடங்களின் அனுபவங்களை காணலாம்.

முதலாம் ஆண்டில் பொங்கல் தினத்தில் எங்களை வழி நடத்தியவர் எங்கள் வகுப்பு ஆசிரியர் கருப்பசாமி. அவர் இவர் தான். சிங்கம்ல…

எங்களுக்கு முதலாம் ஆண்டு என்பதால் பொங்கல்தினம் பற்றி அதிகம் ஆர்வம் இருந்தது. முதலாம் ஆண்டில் பொங்கல் தினவிழா கொண்டாட நாள் குறிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வகுப்பும் பரபரப்பானது. கல்லூரியே பொங்கலுக்கு தயாரானது.

பொங்கல்தின விழா நடைபெறும் தினம் காலை வழக்கம் போல கல்லூரி ஆரம்பமானது. முதல் வகுப்பு ஆரம்பமானது. ஆனால் பாடம் நடத்தவில்லை. அட்டகாசமாக வகுப்புகள் அலங்கரிக்கப் பட்டது. அலங்காரங்களுடன் கூடிய வகுப்பறை அந்நியமாக தெரியவில்லை. காரணம் எங்கள் வகுப்பறை எப்போதும் அப்படிதான் இருக்கும்.

நேரம் பத்தில் அடித்து பதினைந்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போது மாணவர்களில் சிலர் பொங்கல் பொங்க தேவையான அனைத்தையும் வாங்க கிளம்ப தயாரானார்கள். அருகில் இருக்கும் திசையன்விளை சந்தைக்கு சென்று  கரும்பு , பொங்கல் பானை, சர்க்கரை , அது இது என அனைத்தையும் வாங்கிவிட்டு திரும்பிய பின் பொங்கல் விழா இனிதே நடைபெற ஆரம்பம் ஆனது.

இதோ எங்கள் வகுப்பு ஆசிரியர் கருப்பசாமி அவர்கள் சர்க்கரையை பொங்க பானையில் போட தயாராகிவிட்டார். அவரருகே அவருக்கு உதவியாக வகுப்புத் தோழிகள்.

இடப்பக்கம் கையில் கட்டையோடு இருப்பவர் முத்துலெட்சுமி. வலப்பக்கம் சுமிதாஆனந்தி, நித்யா , பிரேமா, பிரபாவதி, பவானி.

பின்புலத்தில் கரும்புகட்டு (ஐந்து மட்டுமே) தூக்கிக்கொண்டு போவது பூபால அருண் குமரன் , அருகில் புன்னகையுடன் நண்பன் வைரவன்.

சர்க்கரை இனிதே போடப்பட்டு விட்டது. இனி என்ன கொஞ்ச நேரத்தில் ரெடியாகிவிடும் மணக்க மணக்க இனிக்க இனிக்க பொங்கல். ஆம், இதோ பொங்கல் பொங்கி விட்டது.

பொங்கிய பொங்கல் வகுப்பறைக்கு இடம் மாற்றப்பட்டு ஆசிரியர் ஸ்ரீதர் அவர்களால் இறைவனுக்கு படைக்கப் பட்டது.

பின்பு கல்லூரி முதல்வருக்கு பொங்கல் கொடுக்கப்பட்டது.பின் ஏனைய ஆசிரியர்களையும் வகுப்பு அழைத்து பொங்கல் பரிமாறப் பட்டது.

(இடப்பக்கத்திலிருந்து) ஸ்ரீதர் ,சுரேஷ் குமார்,  ராஜாராம், கிருஷ்ண மூர்த்தி.

பின்பு ஒவ்வோரு வகுப்பும் தங்களுக்குள்ளாகவே பரிமாறி உண்டும், மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு கொடுத்தும், மற்ற வகுப்புகளுக்கு சென்று அவர்களுடன் சேர்ந்து நாங்கள் உண்டும் என பொங்கல்  வயிற்றை மட்டும் இன்றி மனதையும் நிறைத்து விட்டது.

பின்பு எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
தெளிவாக இல்லை என்றாலும் மனதில் அழியாமல் இருக்கும் நிழற்படம்.

இவ்வாறாக பொங்கல் விழா இனிதே நிறைவடைந்து மனநிறைவுடன் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப, ஆசிரியர் ஸ்ரீதர், கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் ஒரு புகைப்படம் எடுத்தவாறு நாங்களும் கிளம்பினோம்.

இவ்வளவு நேரம் நடந்த விழாவில் ஒருவர் மட்டும் காணவில்லை :: ராம் குமார். அடுத்த பொங்கல்விழாவில் அவனுடன் சேர்ந்து செய்த கலாட்டாகளுடன் மீண்டும் சந்திக்கலாம்.

என்றும் நட்புடன், உங்கள் நண்பன்…