இந்த ஒரு நிமிடக்கதை நம் மனதில் வீசும் கணைகளுக்கு அளவே இல்லை.
ஆனாலும் இதுவரை யாரிடமும் பதிலில்லை. இது ஒரு விடியலை தேடிச் செல்லும் பயணம்…” நாளை  புறப்படுகிறோம் ” என்ற தன் நாட்குறிப்பின் கடைசி எழுத்துக்களோடு உறங்கச் சென்றாள். அந்த எழுத்துக்குள் அவளின் கதறல் இருந்தது.

விடியல் வந்தது.ஆனால் அவள் குடும்பத்துக்கு அது இருளாகவே தெரிந்தது. மதிய நேரம், மாலை நேரத்தின் வருகைக்காக காத்திருக்கும் ஒரு தருவாயில் தந்தை தாயோடு தனிமரமாய் புறப்பட்டது அவள் குடும்பம்.அது விடியலை நோக்கிய ஒரு பயணமாக இருந்தது.

படகில் ஏறினார்கள். சீறிப்பாயும் காளையாய் படகு தன்னை எதிர்க்கும் அலைகளோடு யுத்தம் நடத்திக்கொண்டே நகர்ந்தது. பயணம் முடியவில்லை. இரவு அவர்களை அணைத்துக் கொள்ள , மோட்டாரின் சப்தங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டு விரல்களின் பிடியில் துடுப்பு துடிக்க ஆரம்பித்தது. இரவுகள் ஏளனத்தோடு அவளை பார்த்தது. அவள் சலனமேயில்லாமல் துடுப்போடு உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் கண்ணீர்த் துளிகள் விழுவதை அறியாமல் இருந்தது அலைகடல்.

இருளை கிழித்துக் கொண்டே அவள் குடும்பம் சேர நினைத்த இடத்தை அடைந்தது. விடியல் வரும் என்ற நம்பிக்கையில் உடுத்திய உடையோடு வந்து சேர்ந்தது அவள் குடும்பம்.

விழியோரம் கடலலைக்கு கொடுக்காமல் மிச்சம் வைத்த கண்ணீரை சிந்தவிட்டபடி  அவள் சற்று நினைத்துப்பார்த்தால் ,
“கயல்விழி என்ற அழகான தன் பெயரை, இனி ‘அகதி’ என்று அசிங்கப்படுதுவார்களே என்று.”

இரண்டாம் ஆண்டில் படிக்கும் போது கல்லூரி இதழுக்காக எழுதிய கதை இது.
என்றும் தீராத நட்புடன், உங்கள் நண்பன்…