August 1, 2010

சொர்க்கம் கண்டவன்…

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

 

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா…

 நன்றி

July 26, 2010

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது…

நீங்கள் இணையத்தில் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு…

“என்னை சுற்றி எந்த கண்காணிப்புக் கருவியும்  இல்லை நான் தனிமையில் தான் இருக்கிறேன்” என்று எண்ணினால் அதுவும் உங்கள் தவறு தான்…

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது என்பதை வெறும் 35 வினாடிகளில் அழகாக கூறிய இந்த காணொளியை நீங்களும் பாருங்கள்…

[youtube=http://www.youtube.com/watch?v=fuDPjhrQQQA]

இது போன்று சுவாரஸ்யமான காணொளிகளை நீங்களே உருவாக்கிட : தொடவும்

July 24, 2010

சுஜாதா_ஸ்ரீ ரங்கத்து கதாநாயகன்

சுஜாதாவின் சேவையை யாராலும் மறக்க முடியாது…

தமிழர்களுக்கு கணினியை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டியவர். கணினிக்குள் தமிழை கொண்டு வரவும் ஆர்வம் காட்டியவர். நான் ரசித்த சில எழுத்தாளர்களில் என்னை பெரிதும் கவர்ந்தவர்.

நான் ரசித்த இந்த ஊடகத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…

[vimeo http://vimeo.com/5037086 w=400&h=300]

நன்றி…

July 15, 2010

நந்தனார் நாடகம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுவிழாவுக்காக இறைவன் சிவபெருமானின் தொண்டர்களில் ஒருவரான நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தோம்…நாடகத்தின் பெயர் ” பக்தனின் பெருமை
அதில் ஒரு காட்சி நிழல்படமாக,


ஆதித்தன், செல்வ கணேசன், சண்முகவேல், கேசவன், நான்(பூபாலன்).
நான் தாங்க நந்தனார்…பல காமெடி நடந்ததுங்க இந்த நாடகத்துல…

இந்த  நாடகத்தை அரங்கேற்ற பெரிதும் உதவியது எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.சிவகலை.

இந்த நாடகத்துல என்னுடைய முதல் வசனம் :
( காட்சி – 1   , இடம் : ஆதனூர்   , நந்தனாரும் நான்கு அடியார்களும் )
நந்தனார் : ” செய்தொழிலே சிவன் தொழில். சிவனை எண்ணி எத்தொழில் செய்தாலும் அது சிவனுக்குரியதாகிறது. சிவனை மறந்து செய்யும் தொழில் இழிதொழிலாகிறது.”

எப்படி வசனம் ஞாபகம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது…

நந்தனாரின் வசனம் கொண்ட குறிப்புகள் என்னிடம் உள்ளது. நாடகத்தை வீடியோ எடுக்கவில்லை என்பது சின்ன வருத்தம்.

“நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்று பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஏன் ,  உங்களையும் பலர் அப்படி கூறி இருக்கலாம்…

நந்தனார் சிவபெருமானின் தொண்டர்.63 நாயன்மார்களில் ஒருவர்.
தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் நந்தனாருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.ஆகவே  வாசலில் நின்றே கும்பிட்டுவிட்டு சென்று விடவேண்டும். சிவபெருமானின் முன்னால் உள்ள நந்தி சிவபெருமானை பார்க்க விடாதபடி மறைத்துக்கொண்டு  இருந்தது. ( இதுதான் “நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்பதன் பொருள் ).
நந்தனார் சிவபெருமானை காண முடியாததால் நந்தியை சற்று நகரும்படி சிவனை நோக்கி பாடல் ஒன்று பாடுவார். நந்தி நகர்ந்து சிவபெருமான் காட்சி தருவார்.

நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்றும் அழைப்பார்கள். நந்தனாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ::: இங்கே


நந்தனாரின் வரலாற்றுத் திரைப்படத்தில் சில காட்சிகள் :
1. நந்தனார் சிவபெருமானை வணங்கும்படி அறிவுறை கூறும் காட்சி( அற்புதமான வரிகள் ) ,

[youtube=http://www.youtube.com/v/0r5FMasD0zo]

2. பிற உயிர்களை கொல்ல கூடாது என்று மக்களுக்கு அறிவுறை கூறும் காட்சி ,

[youtube=http://www.youtube.com/v/h9XJFDpViPg]

நந்தியை சற்று விலகி அமரும்படி கூறும் பாடலை காண ::: இங்கே

நாடகத்தில் முடிவில் நந்தனார் தீயில் இறங்கி உயிருடன் வெளியே வந்து  தன் பாவங்களை போக்கிகொள்வார். பின்பு “” ஹர ஹர மஹா தேவா ! சம்போ சதாசிவா ! பரமானந்தம் அடைந்தேன். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருவதாகுக .. வாருங்கள் , அனைவரும் ஆலயத்திற்கு சென்று சிதம்பரநாதனை சேவிப்போம் “” என்று நந்தனார் கூறியவாறு நாடகம் நிறைவடையும்.

நன்றி…

July 14, 2010

வழிதோறும் வெற்றி…

கவலைகளின் கவன்கண்டு
கண்ணீரை பெற்றவனே ,

கண்ணீரின் சுவைகண்டு
கடலிலே கலந்தவனே ,

உதயம் பூக்கும்போது
உறக்கம் கொண்டவனே ,

பிறப்பின் போதே அழுதுவிட்டாயே , இன்னும் ஏன் ?
போதும்…  அலுத்துவிட்டது…

உறங்காத உன் கனவுகளுக்கு
உருவம் கொடு…

வெறும் கனவுகளை
வெற்றி படிகளாய் மாற்று…

விழியோடு காத்திருப்பு…
வழிதோறும் வெற்றி…

உன்னை வெல்ல உலகம் காத்திருக்கிறது; கவலை படாதே ,
நீ வெல்ல உலகமே இருக்கிறது…