புகுந்த வீட்டில் வாழ்வதை பெண்கள் ஏன் வனவாசம் செல்வது போல் எண்ணி வருந்துகிறார்கள்?

இந்த கேள்வியை Quora என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் வினவ,

சிலர் கேள்விக்கு  கேள்வியாக கணைகளை தொடுகிறார்கள் இப்படியாக,

“ஒரு மாற்றத்திற்கு நீங்கள் மனைவி வீட்டில் சென்று வாழ்ந்து பாருங்களேன் .அப்போது புரியும்”

“எங்கே, உங்கள் மேனேஜர் அல்லது பிசினஸ் க்லையண்ட் வீட்டில் சென்று தங்கி வந்தபின் இதே கேள்வியைக் கேளுங்களேன் பார்ப்போம்?”

மேலும் சொல்கிறார்,

“காதல் திருமணமாய் இருக்கும் பட்சத்தில் கூட, அந்தப்பெண் பழகியது (பெரும்பாலும்) அந்த ஆணிடத்தில் மட்டும் தான். அக்குடும்பத்தினரோடு இருக்காது”

இதை வாசிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது, பெண் பழகியது அந்த  ஆணிடம் மட்டும் தான், அப்படியென்றால்  ஆண்  என்ன அந்த பெண் வீட்டாரின் தந்தை தாய் மற்றும் உறவினர்களோடும் சேர்த்தே பழகுகிறானா ?? ஆணும் பெண்ணுடன் மட்டும் தான் பழகுகிறான், ஆனால்  அவன் தனது காதலியின் பெற்றோரை  தவறாக மனதில் சித்தரித்து  வருவதில்லை. அதற்காக  பெண்ணை நான் குறை கூறவில்லை, புரிதல் இல்லாத காரணத்தால் (மருமகள் மற்றும் மாமியார் இருவரும் ) வாழ்வில் மகிழ்ச்சியை தொலைக்கிறார்கள்.

இதை சுதர்சனா சடகோபன் அவர்கள் அழகாக விவரிக்கிறார்,


ஒரு பெண்ணிடம் அவளது திருமண வாழ்வைப் பற்றியும், புகுந்த வீட்டைச் சுற்றியும் கூறப்படும் பல்வேறு கதைகளே அவளை அப்படி பயப்பட வைக்கிறது. எல்லா பெண்களும் இவ்வாறு எண்ணாவிட்டாலும், ஒரு சில பெண்கள் புகுந்தவீட்டிற்குச் செல்வதை வனவாசம் போலவே உணர்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

நமது சமுதாயம் சிறு வயது முதலாகவே பெண்களுக்கு ‘மாமியார்’ என்ற சொல்லை எதிர்மறையான சொல்லாகவே காட்டி வளர்க்கிறது.

  1. மாமியார் என்றால் மருமகள் கூட சண்டை மட்டுமே போடுபவள். (எவ்வளவு நகைச்சுவைத் துணுக்குகள் படித்திருப்போம் மாமியார்-மருமகள் சண்டையை மையமாக வைத்து)
  2. மாமியார் என்றால் கொடுமைக்காரி.
  3. மருமகளை வேலை வாங்குவதற்காகவே அந்த வீட்டில் வாழும் ஒரு ஜீவன். ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்கவைத்து கொலை கூட செய்பவள்! (இதுதான் காலங்காலமாக நம் தொலைக்காட்சித் தொடர்களில் சொல்லப்படும் காவியக் கதை)

இப்படி ஒரு தோற்றத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே நிறைய பேருக்கு இந்த புகுந்தவீட்டுப் பிரச்சனை இருக்கிறது.

கூடவே, திருமணமாகப் போகும் பெண்களுக்குச் சுற்றியிருப்போர் வழங்கும் அதிமேதாவித்தனமான அறிவுரைகள் மேலும் அந்த பயத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்குத் திருமணம் நிச்சயமான சமயத்தில் ஏற்கனவே திருமணமான என்னுடைய நெருக்கமான தோழி எனக்குச் சில அறிவுரைகள் வழங்குவதாகக் கூறி பின்வருமாறு கூறினார்:

“உன் மாமியார்கிட்ட மொதல்லயே பார்த்து நடந்துக்கோ. வேலை எல்லாம் செஞ்சு அவங்க சொல்றபடி கேட்டு அடங்கி மட்டும் நடந்திராத. அப்புறம் உன் தலையில் ஏறி மிளகா அரைச்சிடுவாங்க.”

நான் இப்படி ஒரு ‘அறிவுரையை’ எதிர்பார்க்கவே இல்லை. இதுதான் அவள் சொன்ன அறிவுரை என்று ஏற்கவே எனக்குக் கொஞ்சம் நேரம் பிடித்தது. என் கணவரைப் பெற்றெடுத்தவர் என்ற முறையில் என்றைக்கும் என் மாமியாரை மரியாதையோடு, மதிப்போடு, அன்போடு அணுகவேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான். அவர்களைப் பற்றி நானாகவே எதையும் சித்தரித்துக் கொள்ளாமல் அவர்களைப் புரிந்து கொள்ளும் மனதுடன் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, முதலிலிருந்தே அவர்கள் சொல்வது எதையும் கேட்காமல் இருக்க வேண்டும் என்ற வார்த்தை ஏற்புடையதாக இல்லை. என் தோழியிடமும் அதையே கூறினேன்.

இன்று, எனக்கும் என் மாமியாருக்கும் இடையே அழகான உறவு இருக்கிறது. என் கணவரின் மீதுள்ள அன்பில் நாங்கள் இருவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

அடுத்து கிடைத்த அறிவுரை இதற்கும் ஒரு படி மேல். என் அண்ணனின் தோழி ஒருவர்,”நீயும் உன் மாமியாரும் சண்டை போடும்போது நீ அவர்களிடம் ஒன்றும் சொல்லாதே. உன் கணவரிடம் மட்டும் நடந்ததைக் கூறு. உன் கணவரும் நீ எதிர்ச்சண்டை எதுவும் போடாத காரணத்தினால் உனக்கே சாதகமாகப் பேசுவார். அதை விட்டுவிட்டு நீயாக உன் மாமியாரை எதிர்த்துப் பேசினால் உன் கணவரின் ஆதரவு கிடைக்காது. பிறகு சங்கடம்தான்” என்று அறிவுரை கூறினார். சண்டையில்லாமல் எப்படி புகுந்த வீட்டில் வாழ வேண்டும் என்று அறிவுரை கொடுக்க ஆளில்லை. ஆனால் போடுகிற சண்டையை எப்படி நமக்குச் சாதகமாக ஆக்க வேண்டும் என்று அறிவுரைகள் மட்டும் ஏராளம் வந்தவண்ணமிருந்தன.

இதுதான் நம் சமுதாயத்தின் பிரச்சனை. மாமியார் என்றாலே இப்படித்தான் என்று முத்திரை குத்திவிடுகிறோம். ‘மாமியார் என்றால் கொடுமைப்படுத்துவார், அதற்கு இடம் கொடுக்காதே’ என்றெல்லாம் அறிவுரை வழங்கி ஒரு பெண்ணை நாம் அனுப்பும் பொழுது, அந்தப் பெண் மாமியாரையும் நாற்றனாரையும் புலியும் கரடியுமாகத்தானே பார்ப்பாள்?! பின்னர் புகுந்த வீட்டிற்குள் போவது வனவாசம் போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

என் தோழியிடமிருந்து ஒரு மருமகளாக எனக்குக் கிடைத்த அறிவுரைகளைக் போலவே நம் ஊரில் மாமியார்களுக்கும் அவர்களுடைய தோழிகள் மூலம் பல அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ‘முதல்லயே அடக்கி வைக்கணும்’, ‘ரொம்ப இடம் கொடுக்காதே!’ ‘அவளை நீ உன் கைக்குள்ள வைக்கலைனா உன் பிள்ளை அப்புறம் உனக்கில்ல’ போன்றவை அவற்றுள் சில.

  1. மருமகள் என்றால் மோசமானவள்.
  2. வந்தவுடன் பிள்ளையை முந்தானையில் முடிந்து கொள்வாள்.
  3. வந்த உடனே மாமியாரிடமிருந்து உரிமைகளைப் பறித்துக் கொள்வாள்.

இப்படியெல்லாம்தான் நம் சமூகம் மருமகள்களைப் பற்றி மாமியாருக்கும் கற்றுத்தருகிறது.

இப்படித் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்றிக்கொண்டு, ‘மருமகள் என்றாலே இப்படித்தான்’ ‘மாமியார் என்றாலே இப்படித்தான்’ என அவர்கள் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டு பழகுவதாலேயே, அவர்கள் செய்யும் சாதாரணச் செயல்களைப் பார்த்தாலும் தவறாகவே தெரிகின்றது. இறுதியில் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு உறவு முறிந்துபோகிறது.

சமுதாயம் கற்றுக்கொடுத்த இம்மாதிரியான தேவையில்லாத stereotype-களைத் தூக்கி எறிந்துவிட்டு, மனதில் மாமியாரை/மருமகளைப் பற்றி தானாகவே தவறாக எதையும் யோசிக்காமல், நன்றாக அவர்களுடன் பேசி அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம் என்று மாமியார்-மருமகள் இருவரும் நினைத்தாலே, முக்கால்வாசி பிரச்சனை இங்கே தீர்ந்துவிடும்.

வருபவள் நம் மகனின் வாழ்க்கைத்துணை. அவளை அவளுக்குரிய மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கும்போது, மருமகள் மற்றுமோர் மகளாகவே தெரிவாள்.

நம் கணவனைப் பெற்றெடுத்தவர் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நாம் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு மருமகள்கள் செல்லும்பொழுது, புகுந்த வீடு தன் வீடாகவே தெரியும். வனவாசம் செய்யச் செல்லும் ஒரு காட்டைப் போல் தெரியாது.


இனி வரும் தலைமுறையாவது புரிதலோடு வாழ, இருக்கும் தலைமுறை புரிதலோடு இருக்க வேண்டும் என்று எண்ணியபடி பதிவிடுகிறேன்.

உபயம்: 1 & 2

என்றும் நட்புடன்,

பூபால அருண் குமரன் ரா