விடியல் என்ற தலைப்பில் நம் நண்பன் நிரூபன் பன்னிரண்டாம் வகுப்பில் எழுதிய கவிதை தான் இது.
இந்த கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மனம் உடை(க்கப்)பட்ட நிலையில் எழுதப்பட்டது. கவிதையின் ஆரம்பத்தில் இதயம் உலகை பிரிய தயாராகி கொண்டு இருக்கும் மனநிலையும் போக போக உலகத்தை ஆள மனம் தயாராகிக் கொண்டு இருக்கும் மனநிலையும் கலந்து இருக்கும்.
பள்ளியில் நடந்த ஒரு சின்ன ( அந்நேரத்தில் அது பெரிய ) பிரச்சினை காரணமாக ஆசிரியர்களிடம் கொஞ்ச மன வருத்தம், “கோழையாய் அழுகிறாய் நீ “ என பேச்சு. தோழிகளே பார்த்து சிரித்தது (அதுக்கு பயபுள்ள முறைச்சு பாத்து மிரட்டிட்டான் – அது வேற கதை) அப்படி இப்படி என மனம் உடைந்த நிலையில் வீடு சென்ற நிரூபன் மறுநாள் என்னிடம் இந்த கவிதையை நீட்டவும் “கட முடா கட டன் டங்” என பெருத்த சத்தத்துடன் “உருண்ட” வகுப்பில் பாடம் எடுக்க உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.
நிச்சயம் இந்த கவிதையாய் நான் மிகவும் ரசித்தேன். இன்னும் அவன் கொடுத்த கவிதை என்னிடம் பொக்கிஷமாய் ( பிரவீன், இது வேற பொக்கிஷம்) இருக்கிறது.
இதோ அந்த கவிதை நம் நண்பர்களுக்காக சமர்பிக்கிறேன்.
விடியல்
என் மனசு கனத்தது
என் டைரி நனைந்தது.
பொங்கியது கண்ணீர் மட்டுமல்ல கவிதையும் தான்.
தலைவலியும் காய்ச்சலும் வந்தாலதான் தெரியும்.
தற்கொலையின் அவசியம், அந்நிலையில்தான் புரியும்.
நான் கூட அவர்களை பார்த்து சிரித்ததுண்டு,
நேற்று வரை…
தவிலுக்கு இருபக்கம் அடி,
ஆனால் எனக்கு…
அதிகமாய் சிரிப்பவர்கள் ( சிரிப்பதுபோல் காட்டிகொள்பவர்கள்)
அதிகமாய் வருந்தினவர்கள்.
இவர்களுக்கு, புன்னகை உதடுகளில் மட்டும்
வெடிச்சிரிப்பு வாயில் மட்டும்.
பெருஞ்சோகத்தால் மனசு வெடித்துவிட கூடாதென்று
பெருஞ்சிரிப்பு சிரித்து உதடு வெடித்தவர்கள்.
அவர்களில்…. நானும் ஒருவன்.
நான்கு பக்கமும் அடைபட்ட தண்ணீர், வேறு வழியின்றி
வானுக்கும், பூமிக்கும் பாய்வதுபோல்
நானும் போகிறேன்… போகிறேன்…
பிரச்சனைகளுக்கு தற்கொலை மட்டும் தீர்வல்ல
தற்கொலையும் ஒரு தீர்வு.
ஒரு ஆண் அழுதால்
அது அவனது கொலைத்தனத்தை காட்டுகிறது என்பதல்ல.
அவனது சோகத்தின் அளவை காட்டுகிறது.
என் கண்கடலில் சுனாமி !
திடீரென்று ஏற்பட்ட வெள்ள கண்ணீரால்.
கன்னக் கரைகள் தடுமாறியது உண்மை.
தலையணை நாட்டிற்குள் க(த)ண்ணீர் நுழைந்தது உண்மை.
—– ——- —— ——- ———- ———
———— —————– —– – ———
— —- —- —- ———————— ————
வெறுமை கூட அழகுதான்.
வெளிப்படுத்த இயலாத வார்த்தையே மெளனம் ஆகிறது.
வார்த்தைக்கு பொருளுண்டு.
மெளனத்திற்கு ? …
அழுதேன், … அழுதேன். ..
கண்ணீர் முடியும் வரை அழுதேன்
கிழக்கு விடியும் வரை அழுதேன்
கண்டு கொண்டேன் , கற்றுகொண்டேன்.
மணிக்கணக்கில் அழுதாலும், வற்றாமல்
ஊ(ற்)றுகின்ற கண்ணிடமிருந்து
“ முயற்சியை கைவிடாதே ” என்பதை கற்றுகொண்டேன்.
என்னை விட என் கண்ணீர் சுரப்பி
தன்னம்பிக்கை மிக்கது என்பதை கண்டுகொண்டேன்.
தங்கத்தை சுட்டு இளக்கும் தீக்கு தெரியவில்லை
நாம் அதை அழகாக்குகிறோம் என்று.
என்னை அழவைப்பவர்களுக்கு தெரியவில்லை,
என்னை ஆயத்தப்படுத்துகிறார்கள் என்று.
கற்று கொண்டேன் !
என் மீது எறியப்படும் கற்களை கொண்டு
மாளிகை கட்டும் வித்தையை !
என் மீது எய்தப்படும் அம்புகளை கொண்டு
பல்இடுக்குகளை தூய்மைபடுத்தும் கலையை !
உயிர் துறக்கும் எண்ணத்தை துறந்தேன்.
விளக்கு எரிய எரிய இருள் விலகுவதுபோல்
மனது தெளிய தெளிய கவலை விலகியது.
சரி !
இனியாவது தூங்கலாம் என்று நினைக்கும்போது
சேவல் கூவும் சத்தம் !
போ !
கவலையில் ஓர் இரவு கழிந்திருந்திருக்கிறது.
அன்றொருநாள் “மனதில் உறுதி வேண்டும்”
என்று கூவிய குயிலின் குரல்
அடிமனதில் இன்னமும்.
விடிந்துவிட்டது !
கிழக்கு மட்டுமல்ல –
என் வாழ்வும் தான்…
என்றும் நட்புடன், உங்கள் நண்பன்…