பள்ளி தோழர்களுடன் 2012ம் ஆண்டு பொங்கல் நிறைவாய் நிறைவடைந்தது.
பொங்கல் தினத்தை பற்றிய ஒரு சின்ன அலசல்…
காலை வீட்டின் பொங்கலை கொண்டாடிவிட்டு ஒன்பது மணியளவில் வேளச்சேரி புறப்பட்டேன். வழியில் பொங்கலை கோலங்கள் தெருவை அலங்கரித்திருந்தது.
வேளச்சேரியில் கொஞ்சம் காத்திருப்புக்கு பின் ஆதித்தன் தன் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தான். அவனுடன் தி.நகர் நாராயணர் கோயிலுக்கு பயணம். (ஆதித்தனுக்கு கோயில் நிர்வாகத்துடன் எதோ வேலை இருந்ததால் அங்கு சென்றோம்).
அப்படியே தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரவீன் அறைக்கு சென்றோம்.
அறையில் வழக்கமாக தங்கி மற்றும் தாங்கி நிற்கும் ஊர்தலைவர் இதயகுமார் அவர்கள் தங்களது அலுவல் காரணமாக நைசாக பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
அதே போல பொட்டல்காட்டை ஊராக மாற்றி அதை உலகம் என்று சொல்லை ஊரை ஏமாற்றிகொண்டு இருக்கும் அண்ணன் சண்முகசுந்தரம் அவர்களும் ஊருக்கு சென்றுவிட்டார்.
இப்பொது அறையில் மிஞ்சி இருப்பது பிரவீன், மோகன் மட்டுமே. அவர்களை அறைக்கு சென்றடைந்த போது அங்கே நசீர் அவர்கள் வந்து விட்டார். (ஆச்சரியம், ஆனால் உண்மை)
பின் பிரவீன் அவர்கள் பொங்கல் பொங்கும் சிறப்பான வேலையை ஆரம்பித்தார். இனிதே பொங்கல் பொங்கியது. இறைவனுக்கு படைத்தோம். நாங்களே சாப்பிட்டோம்.
பொங்கல் வயிற்றில் தஞ்சம் புகுந்ததும் மதிய உணவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் மும்முரமாய் நடைபெற்றது.
ஒரு வெங்காயத்தை உரிக்க பட்டபாடு எனக்குதான் தெரியும் என்று புலம்பிய படி நான் இருக்க, அம்புட்டு வெங்காயத்தையும் அரை நொடியில் வெட்டி எறிந்தான் பிரவீன். காதலியின் விரல்நகத்தை வெட்டுவது போல தக்காளியை கொஞ்சி கொண்டிருந்தான் மோகன்.
இப்படியாக போய்கொண்டிருக்கும் போது கல்குறிச்சி சிங்கம் முருகராஜா அவர்கள் அறைக்கு வந்தார். இவரை தொடர்ந்து என் கல்லூரி நண்பன் , வாலிபால் கேப்டன் பிரவீன் அவர்களின் பள்ளி எதிரி ரவிபாலன் அறைக்கு வந்தான். ( பொண்ணு கைய புடிச்சி இழுதியா, என்ன கைய புடுச்சி இழுதியா)
மதியஉணவு தயாரானது. உணவுக்கு பின் நண்பர்கள் அனைவரும் 35வது புத்தக திருவிழாவுக்கு செல்ல தயாரானோம்.
தங்க கம்பி மோகன் அவர்கள் வர மாட்டேன் என்று முதலில் அடம் பிடித்தார். பின்பு நாங்கள் அனைவரும் வற்புறுத்திய காரணத்தால் கோபத்தில் ஊர்தலைவர் இதயகுமார் பஞ்சாயத்துக்கு போவதற்காக மடித்து பத்திரமாக வைத்திருந்த அவரது துணிமணிகளை தூக்கி எறிந்தார். அவரை எப்படியோ சமாளித்து சம்மதம் வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. (எனக்கென்னமோ உம்மேலதான் சந்தேகாமா இருக்கு…, பெருசு இந்த பஞ்சாயத கலைக்க பட்டபாடு எனக்குதான் தெரியும்,தேவையில்லாம சிறுத்தைய சுரண்டி பாக்காத.. போ.போ…போ… )
பச்சையப்பா கல்லூரி எதிரில் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் புத்தகவிழாவுக்கு வந்தடைந்தோம்.
உள்ளே சென்று புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டு இருக்கும் போது தோழர் நிருபன் அவர்களை எங்களுடன் இணைந்தார். நானும் நிருபனும் சுற்றய சுற்றில் இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாய் வெளியே வந்தோம்.
(இவுரு எப்பவுமே இப்படி தான் போஸ் குடுப்பாரு, பயபாடாதீங்க)
மற்றவர்கள் எங்களுக்கு முன்பாகவே வெளியே நடைபெற்றுகொண்டிருந்த வினாடிவினா போட்டியில் கலந்து கொள்வதற்காக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதன் மூலம் ஆதித்தனை மேடைக்கு செல்ல அழைத்தனர். மேடைசெல்லாமல் இருந்ததால் ஆதித்தனுக்கு பதிலாக நான் மேடைக்கு ஆதித்தன் என்ற அடையாளத்தோடு சென்றேன்.
பதில் தெரியாத கேள்விகளுக்கு கூட்டத்தோடு கோவிந்தா போட்டு ஒரு ஆடை ஆறுதல் பரிசாக பெற்றேன். ( இதெல்லாம் ஒரு பொழப்பு )
மோகனின் நண்பன் ஒருவன் அறைக்கு வந்திருப்பதாக வந்த செய்தியால் மோகன் அறைக்கு சென்று விட்டான். பின்பு ஏனையவர்கள் அனைவரும் சென்ற இடம் ஸ்கைவாக்.
பிரமாண்டமான பொங்கல் பானை வரவேற்றது. சும்மா சுற்றி பார்த்துவிட்டு கே.எப்.சி.குள் நுழைந்தோம். ஆதித்தனும் நசீரும் ஸ்பான்சர் செய்ய, பொங்கல் அதுவுமாய் சில கோழிகளின் கால்களை விழுங்கினோம். அரை நொடியில் ஆயிரம் ரூபாய் ஏப்பமாய் போனது. # கழுத விடு, ஒரு நாளைக்கு தானே…
மறுநாள் முதல் இயந்திரமாய் அலுவல் தொடர அவரவர் வீட்டுக்கு சென்றோம். இவ்வாறாக பொங்கல் தினம் இனிமையாக நிறைவுக்கு வந்தது…
:: பொங்கல் கொண்டாட்டத்துக்காக செல்லும் வழியில் கிளிக்கியவை ::
பொங்கல் அன்று மட்டுமாவது பசிக்காமல் இருந்தால் இவர் யாரோ ஒருவரது வீட்டு வாசலில் தன் பொங்கலை கொண்டாட காத்திருந்திருக்க மாட்டார்.
சூரிய பகவானிடம் ஆசீர்வாதம் வாங்கியபடி பொங்கலை தன் கனவில் கொண்டாடி கொண்டிருக்கும் வேளச்சேரி மூதாட்டி,
பொங்கல் அன்றும் நான் ஒரு கவர் அமெளண்ட் எம்ப்ளாயி தான். #பேருந்து ஓட்டுனரின் பொங்கல்
பொங்கலில் எடுத்த அனைத்து நிகழ்படங்களையும் பார்வையிட :: இங்கே.
அனைத்து நிழற்படங்களை பார்வையிட :: இங்கே அல்லது இங்கே.
தீராத நட்புடன்,
பூபால அருண் குமரன் ரா