வருடம் 2021, செப்டம்பர் மாதம் 25ம் நாள்…
மாலை வேளையில் பனிக்குடம் உடைந்தபடி மருத்துவமனை வாசலை அடைந்தோம். இரவெல்லாம் வாயும் வயிறுமாய் வலியும் உயிருமாய் கடந்தது.
26ம் நாள் அதிகாலைபொழுதினில் பிரசவ அறை பிரவேசம்,
வலியின் அலறல், வலுவின்மை, நம்பிக்கையூட்டல், தன்னம்பிக்கை என அனைத்தும் மாறி மாறி நாழிகை செல்ல, “செல்ல மகள்” உலகை ரசிக்க உதயமானாள்.
இரண்டாம் முறையாக என் மனைவி எங்கள் மகளை பெற்றெடுத்து மூன்றாம் முறையாக மறுபிறவி பெற்றாள்
அனைத்தும் நலமாக…
என்ன பெயர் வைக்கலாம் ஆரம்பமானது தேடல் விளையாட்டு
இம்முறையும் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். தாயும் தாரமும் அனுபவம் இருந்ததால் மறுக்கவே இல்லை
அ, இ, உ, ஏ – இவை தான் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள்
சிலர் பல பெயர்களையும், பலர் சில பெயர்களையும் பரிந்துரைத்தனர்.
அதில் சில பல,
அபிதா, அதிதி, அதுரா, அகலிகா, அக்சயா, அபிலா
இசை, இனிதா, இனியா, இலக்கியா, இந்திரா, இன்பா
உமா, உமையாள், உத்தமி, உதயா, உமாதேவி, உதயராணி
ஏழிசை, ஏலா, ஏகாபரனா
அகல்யா, இனிதா, இனியா, உமா – தாயின் பரிந்துரைகள்
அகல்யா அக்’ஷிதா, உத்தரா, அக்’ஷயா – தாரத்தின் பரிந்துரைகள்
பல பெயர்களை கடந்து வந்து, அகல்யா என அறுதியிட்டு உறுதி செய்தேன்
அகல்யா என்றால் ஒளி, பிரகாசிப்பது என்று பொருள்
அகல்யாவின் முதல் எழுத்து ‘அ’ – உயிர் எழுத்துக்களின் முதன்மை எழுத்து
இரண்டாம் எழுத்து ‘க’ – மெய் எழுத்துக்களில் முதல் எழுத்து
மூன்றால் எழுத்தான ‘ல்‘ – என்பது என் முதல் மகளான நிரல்யாவின் பெயர் காரண பதிவில் கூறியது போன்ற நிரல்நிறை அணியின் இரண்டாம் வரியாக கொள்ளலாம், அதாவது ‘ல்’ என்ற சொல் முதல் வரியில்(முதல் மகளுக்கு[நிரல்யா]) மூன்றாம் இடத்தில் இருப்பது போல, இரண்டாவது வரியில்(இரண்டாவது மகளுக்கும்[அகல்யா]) மூன்றாம் இடத்தில் அமைய பெற்று இருக்கும்
‘யா‘ என்பது (பெரும்பான்மையான)பெண்களுக்கே உரித்தான உயிர்+மெய்+நெடிலில்(ய்+ஆ) முடிய கூடிய எழுத்தாகும்
அகல்யா – பிரகாசிப்பவள் – வாழ்க வளமுடன்
(முதல் குழந்தையின் பெயர் விளக்கம் அறிந்திட சொடுக்கவும்)
இனி வரும் தலைமுறையாவது புரிதலோடு வாழ, இருக்கும் தலைமுறை புரிதலோடு இருக்க வேண்டும் என்று எண்ணியபடி பதிவிடுகிறேன்.
உபயம்: 1 & 2
என்றும் நட்புடன்,
பூபால அருண் குமரன் ரா